Saturday 2 July 2016

காவல்துறையில் புகார் அளிப்பது குறித்த விளக்கங்கள்

காவல்துறை செயல்பாடுகள்.

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences),  நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு (Non Cognizable Offences) களாகும்.

அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை,வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாக (Cognizable Offences)கருதப்படுகின்றன.

இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு, தன் மீது அவதூறு பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு, பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படினும்  காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விசயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.

எனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள (கைது செய்வதற்கு உரிய) (Cognizable Offences) வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154 படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (2) ன் கீழ்
முதல் தகவல் அறிக்கை (First Information Report)  நகல் ஒன்றினை இலவசமாக புகார்தாரருக்கு அளிக்க வேண்டும். 

கைது செய்வதற்கு உரியதல்லாத  (Non Cognizable Offences) புகார் எனில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 155 ன் கீழ் புகாரினை பெற்றுக்கொண்டு நீதி மன்றத்திற்கு செல்ல சொல்லி காவல்துறை அறிவுரை சொல்ல வேண்டும்.

காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள (கைது செய்வதற்கு உரிய)  (Cognizable Offences) உங்களின் புகாரினை காவல்நிலையத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தால் / அலைய விட்டால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை அத்தகைய அதிகாரிதானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.


அவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால்... என்ன செய்யலாம்? அடுத்த பதிவில் பார்கலாம்.

3 comments:

  1. மிக நல்ல பதிவு

    ReplyDelete
  2. Simple and good post.... Thanks

    ReplyDelete
  3. It is a classroom-like lecture : simple and elucidative

    ReplyDelete